kandee0702

Monday, June 21, 2010

திருமணங்கள் Facebook ல் நிச்சயிக்கப்படுகின்றன‌

இன்றைய காலத்து இளைஞர்களுக்கு உணவு உடை உறையுள் போன்ற அத்தியாவசிய விடயங்களுடன் வாழ்க்கையில் இன்னொன்றாக மாறிவிட்டது மூஞ்சிப்புத்தகம் என தமிழில் செல்லமாக அழைக்ப்படும் Facebook.


Facebook ஆரம்பித்தகாலத்தில் Orkutன் ஆதிக்கத்தினால் அவ்வளவாக பலரைக் கவரவில்லை ஆனால் காலப்போக்கில் Quiz, Games, Date of the day, எனப் பல விடயங்களைப் புகுத்தி Orkutடை ஓரம் கட்டி முன்னணியில் வந்துவிட்டது Facebook.
நானும் ஆரம்பத்தில் Facebook பக்கம் தலைவைத்துப் படுக்காவிட்டாலும் சும்மா இருக்கட்டுமே என ஒரு கணக்கை ஆரம்பித்து வைத்தேன். 2008ன் ஆரம்பத்தில் நண்பி ஒருவரின் திருமணம் கனடாவில் நடந்தது, அவரது திருமணப் புகைப்படங்களை மின்னஞ்சல் செய்ய அவரிடம் கேட்டபோது தன்னுடைய Facebook ல் இருக்கிறது பாருங்கள் என்றார். அன்று தொடங்கிய அடிமைத் தனம் இன்றைக்கு சிறந்த விவசாயி ஆகும் வரை வந்துவிட்டது.

பின்னர் என்னுடைய பாடசாலை காலத்து நண்பர்கள் பலர் தங்களையும் இணைத்துக் கொண்டபின்னர் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. பாடசாலையின் இறுதிநாள் பரீட்சையில் பார்த்த நண்பனிடம் கூட அளவளாவ முடிந்தது. அத்துடன் எங்கள் பாடசாலைக் குழுமம், எங்கள் வகுப்புக் குழுமம் எனப் பல குழுமங்களில் இணைந்து அன்றைய பசுமையான நினைவுகளை இரைமீட்க முடிந்தது.
"1வது காதலில் தோல்வியுற்றவர்கள் சங்கம்","குப்புற படுத்துக்கிட்டு "யோசிப்போர்" சங்கம்"(அண்ணன் உண்மைத் தமிழன் ஒரு உறுப்பினர்) "வில்லுப் பார்த்து நொந்துபோனோர் சங்கம்", "ஏகனை எதிர்ப்போர் சங்கம்", "அனுஷ்கா", "நயந்தாரா", கூழ் குடிப்போர் சங்கம் (கானா பிரபா ஒரு உறுப்பினர்) எனச் குழுக்கள் பல இருக்கின்றன. இதனை விட பல தமிழ் மொழி சம்பந்தப்பட்ட பல குழுக்களும் திறம்பட இயம்பி மொழி பற்றிய பலவிதமான விவாதங்களைச் செய்கின்றார்கள்.

சில நாட்களுக்கு முன்னர் சில நண்பர்கள் Facebook ல் நாங்கள் விவசாயம்(Farmville) செய்கின்றோம் நீயும் இணைந்துகொள் என எனக்கு கோரிக்கை விடுத்தும் வழக்கம் போல் ஒரு நிலத்தை வாங்கிப்போட்டுவிட்டு சும்மா இருந்துவிட்டேன். எனக்குள் உறங்கிக்கொண்டிருந்த விவசாயி கிளர்ந்து எழுந்து இன்றைக்கு லெவல் 11 வரை சிறப்பாக விவசாயம் பண்ணுகின்றார்.


இன்றைக்கு எனப் பல நண்பர்கள் என்னுடைய பக்கத்து தோட்டக்காரர்கள், நண்பர்கள் அன்பளிப்புச் செய்த முயல்கள், செம்மறி ஆடுகள், மற்றும் பசுக்கள் என பல என் தோட்டத்திம் மேய்கின்றன. வருகின்ற மாதம் என் நண்பர் ஒருவருக்கு யாழ்ப்பாணத்தில் திருமணம் நடக்கவிருக்கின்றது.
அவர் இன்னொரு நாட்டில் இருந்து வருகின்றார். பெண்ணைப் பார்த்தது Facebook ல் தான். திருமணம் பேசும்போது மணமகளின் படத்தை Facebook ல் இருக்கின்றது பாருங்கள் என்றார்களாம் பின்னர் நண்பர் அவரை தன்னுடைய நண்பராக அழைப்பு (Friend Request) அனுப்பி இருவரும் தங்கள் படங்களைப் பார்த்தார்களாம், இதனை விட இருவரினதும் விருப்பு வெறுப்புகளும் அதில் இருந்தபடியால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள இலகுவாக இருந்ததாகவும் கூறினார். இதே போல் இன்னொரு தெரிந்தவர் தன்னுடைய நண்பி ஒருத்தரின் நண்பியை Facebookல் கண்டு பிடித்து காதலித்துக் கொண்டிருக்கின்றார்.
நண்பியின் நண்பர்கள் பட்டியலைப் பார்க்கும் போது ஒரு பெண்ணின் படம் அவரைக் கவர்ந்திருக்கின்றது உடனே அவரின் Profile ஐ பார்த்தபோது இவரின் குணாதிசயங்களோடு பொருந்தியதால் உடனடியா தன்னுடய நண்பியாக்கி பின்னர் அரட்டைகள் அடித்து சில நாட்களின் பின்னர் காதலிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். இத்தனைக்கும் ஒருவர் இலங்கையில் இருக்கின்றார் இன்னொருவர் இன்னொரு ஆசிய நாட்டில் இருக்கின்றார். இதுவரை நேரில் சந்தித்ததில்லை.
இன்னொரு காதல் கோட்டை கட்டுகின்றார்கள், நான் அவருக்கு சொன்ன அறிவுரை கவனம் காதல் கோட்டை கனவுக் கோட்டையாகி விடப்போகின்றது என்பதாகும்.Facebook, Orkut போன்ற இணையங்களில் சில தீமைகள் இருந்தாலும் பல நன்மைகளும் இல்லாமலில்லை. ஆனாலும் இவை நேரத்தைப் போக்கவே பயன்படுகின்றதாக சிலர் கூறுகின்றார்கள்.

No comments:

Post a Comment

Cricket Live Score...